இப்போது நினைத்து பார்க்கிறேன்
சாவதற்கான பயமிருந்த
பால்ய காலங்களில்
அன்றாட இருளும்
விநோத உயிர்களின் சத்தங்களும்
சாத்தானுக்கான காத்திருப்பை நிகழ்த்தின...
என் நிழலைக் கண்டே
பயந்திருந்த இரவில்
கால்களை உதறி உதறி
அப்பாவின் கழுத்தை கட்டிக்கொண்டு
அழுதேனென்றும்
இரவு முழுவதும்
அப்பாவின் தோளிலேயே
தூங்கியதாகவும் சொல்லப்பட்டது
ஒரு விடியலில்
கூரையின் மூங்கில் கழியிலிருந்து
நெடுநீண்ட பாம்பொன்று
முகமருகே தொங்கியது
வெகுநாட்கள்வரை நிழலாடின...
மேலும் பாம்புகள் துரத்துவதாகவே
கனவுகள் சூழ்ந்தன.
முன்னறிவிக்கப்படாத சாத்தானின் வருகை
பாம்பின் தீண்டுதலால்
கொடூரமான இதயமொன்று
பரிசளிக்கப்பட்டது
அது பின்னொரு நாளில்
ஆவாரஞ்செடியில்
புணர்ந்திருந்த சாரைப்பாம்புகளை
மண்வெட்டியால் இருதுண்டுகளாக்கியது
என் மனைவியின் யோனியிலிருந்து
நீண்ட வாலோடும்
நீட்டியிழுக்கும் நாக்கோடும்
துருத்திய கண்களோடும்
பிறக்கவிருக்கும் உயிரிக்காய்
ஆயத்தமாயிருக்கையில்....
வாழ்வதற்கான பயத்தில்
உங்களின் பரிசுத்த ஆவிக்கான காத்திருப்பை
என்மீது திணிக்கும் இக்காலங்களில்
பாம்புகளை தொலைவிலிருந்தே
வேடிக்கை பார்க்கிறேன்
No comments:
Post a Comment