Thursday, August 25, 2011

எதிர்தகவு

சிகிச்சை பிரிவுக்கு வெளியே 
வளாகமெங்கும் 
ஒலித்து ஓயும் 
உன் அழுகுரலும் 

இந்த நொடி 
அடுத்த நொடியென
தொடங்கும் வாதையும்
எதிர்த்தகவிலிருக்கும்


Thursday, August 18, 2011

இன்மை

இன்றளவும் 
நம்புவதற்கில்லை......

முக்காலமும் 
நீ என்ற ஒருத்தி 
இல்லை என்பதை ....

Tuesday, August 16, 2011

பேரன்பின் பிடரி

இங்குதான் எங்கேயோ
வைத்தேன் என்றபடி
அறைமுழுவதும் தேடுகிறேன்

வெளி வரந்தாவிலும்
பலகணியிலும் முற்றத்திலும்
தேடி களைத்த பின்னும்
சமாதானம் செய்கிறாய்

அங்குதான் எங்கேயோ
பார்த்ததாக தேடத்துவங்குகிறாய்

நீயும் பொழுதும்

நீண்ட பகலை போல்
நீண்ட இரவைப்போல்
அவ்வளவு மௌனமாயிருக்கிறாய்

நீண்ட ஒரு பகலில்
நீண்டதொரு இரவில்
இருப்பதை போலவே
அவ்வளவு தனித்திருக்கிறேன்

நீயும் நீயும்

இந்த ஒரு பழக்கத்தையாவது
விட்டுவிட வேண்டுமென
கெஞ்சுகிறாய்...

பிறகு
கெஞ்சுவது உனக்கொரு
பழக்கமாகிவிடுகிறது

மோனத்திருநிலை

என் கால்மேல் காலிட்டு
கழுத்தை கோர்த்துக்கொண்டு
நீண்ட இரவிலிருந்து
காலத்தை எடுத்துவிட்டு
உறங்குகிறாய்

நிலை..

பசுமரக்கிளைகளில்
அணில்கள் தாவுவதை
வேடிக்கை பார்த்திருக்கிறாய்

அணில்களற்ற பசுமரங்கள்
பசுமரங்களற்ற அணில்கள்
பற்றி யோசிக்கும்
ஒவ்வொரு முறையும்

சமையலறையில்
பொங்கி தீர்கிறது நிலை..

Tuesday, August 9, 2011

இப்பொழுதும் 
உன்னை மட்டுமே 
நினைத்து கொள்கிறேன் 
கூடவே வந்துவிடுகின்றன 
கொலுசொலிகள் 

Friday, August 5, 2011

போகிற போக்கில் 
சொல்லிவிட்டு போகிறாய் 

நான்தான் 
நின்ற இடத்திலேயே 
நின்று கொண்டிருக்கிறேன்...
முன்பொரு நாள் 
ஒரு மழைகாலத்தில் 
உன்னை சந்திக்கவே விரும்பினேன் 

மழை வெயிலென 
மாறி மாறி 
வாழ்கையானாய் 
ஏதோ எழுதியபடி 
மேஜையில் அமர்ந்து 
உறங்கி விடுகிறேன்...

எதுவும் எழுதாத 
தாளோடும் பொழுதோடும் 
அமர்ந்திருக்கிறாய் நீ ,.
அணைத்து கிடப்பவனை 
முனகிக் கொண்டே 
மெல்ல விலகி படுக்கிறாய்....

கெஞ்சி கெஞ்சி 
கேட்ட பின்னும் 
இரவை பகலாக்குகிறாய் 
இந்தக்கணம் நீ கேட்கையில் 
சொல்வதற்கு ஏதுமில்லை 

முன்பொரு நாள் 
அவ்வளவு அழகாய் இருந்தாய் 

நான் சொல்லவுமில்லை....
விழுந்துவிட்டேனென நினைத்து 
சமையலறையிலிருந்து 
பதறி வருகிறாய் ...

உடைந்த உன்னை மட்டும் 
எதைக் கொண்டு அள்ளுவதென
புரியாமல் நிற்கிறேன் 
உடைத்தது யாரென தெரியவில்லை 
இறைந்து கிடக்கிறது பகல்.

யாரோ ஒருவனான -என்னை 
கடந்து போகிறாய் நீ 

Monday, August 1, 2011

..................................

விரும்பி கேட்பதாய்
புரிந்து கொண்டதாய் 
பாசாங்கு செய்கிற -நீ 
கேட்டதேயில்லை 
என்னால் சொல்லவே தெரியாத 
தனிமையின் மொழியை...