Sunday, December 25, 2011

ஆதியின் பேச்சுக்குரல்




காலமழை பெய்கிறது

காற்று நனைந்த வெளியில்
துளிர்க்கும் தளிரென
உயிர் பற்றிக்கொண்ட தேகங்கள்
முயங்கி சரிகின்றன

இசைக்க , வியக்க ,ஒளிரவென
இல்லாமல் போகவென
நேசம் சிக்கிக் கொண்டோடுகிற
பொழுதுகளின் நதியில்

நான் நனையாத துளிகள்
சூட்சமத்தின் கடலாகிறது .

மீந்திருக்கும் துளிகளில்
நனைந்து நனைந்து
இன்பம் துன்பம்
இரண்டுக்குமான விதையென
போதிமரத்தின் கிளையொத்து
வெடித்து படர்கிறேன்.

திறந்து கிடக்கும்
இவ்வளவு பெரிய நிலத்தில்
சாவியை தேடுகிறது வார்த்தை

ஆயுளை சிறைகொண்டு
சூட்சமக் கடலில்
ஒளிந்து கிடக்கிற

வார்த்தையின் உயரத்திலிருந்து
இடறிவிழும் துறவுகளில்
ஆதியின் பேச்சுக்குரல் கேட்கிறது
 —

ஊறிய உடலென மிதக்கும் சொல்


====================================
அறைந்து சாத்தப்பட்ட
அறையின் நிறங்களில்
பொழுதுகளை தேடுகிறேன்

என் கோப்பையில்
ஊறிய உடலென
மிதக்கும் சொல்லோடு
தொடங்குகிறது தனிமை

நன்மையிலிருந்து தேக்கவும்
தீமையிலிருந்து விலக்கவுமான
காமத்திற்க்கான கடவுள்சொல்லை

அருகில் அமர்ந்து
பருக தொடங்குகிறது
காற்றை போலிருக்கும்
உன் ஒளி மாய உடல்

கசங்கிய தாள்களென
இறைந்து கிடக்கிறது
உன்னை தேடும்
கரங்களின் சொற்கள்

அயர மறுக்கும் கண்கள்
சொல்லை போல் இருக்கும்
துயர உடலை
குடித்துவிட்டு வைக்கிறது
காலி அறையை ...
 — 

Saturday, December 24, 2011

கான்கிரீட் கவிதைகள் -5


தகர ஷீட்டுகளில்
அறைந்து பெய்யும் மழையில்
பாலிதீன் கூடாரங்களுக்கு உள்ளே
சன்னமாய் தேய்ந்து ஒலிக்கிறது
கல்தச்சரின் முனகல் உளி.

மௌனத்தின் கூடாரங்களில்
கூரையற்ற ஒரு உலகம்
நடுங்குகிறது..
 — 

கான்கிரீட் கவிதைகள் -4


கைப்பிடிச் சுவரில்லாத
ஐந்தாவது மாடியின் விளிம்பில்
நின்று எட்டி பார்க்கிறது
எதையாவது
பற்றிக்கொள்ள துடிக்கும் வாழ்வு

மழையில் நனைகிறது
தார்பாய்க்கு வெளியே
கால்நீட்டி உறங்குகிற
எனக்கும் உனக்குமுள்ள உறவு ...

கட்டி முடித்து
இவ்வளவு உயர வித்தியாசத்தை
அண்ணாந்து பார்ப்பவனை நோக்கி
சாயத் துவங்குகிறது கட்டிடம்
 

பறையின் வானம்


பழகிப்போனது....

கைபடாமல்
துண்டில் இடுகிறாய்
பரிமாறுதலின் துரோகத்தை ....

பசியின் இயலாமையை
முடிந்து செல்கிறோம் ...

பறத்தலை மறந்துவிட்டோம்
பறையின் வானம் நீலம்.....
 

அழுந்தி துடிக்கும் இமைகளின் பாதரச கனவுகள்


உறங்கும் தொலைவு வரை
கூடவே வந்துவிட்டு திரும்பவென
கெஞ்சி நிற்கும் உன் மௌனம்
ஒரு துயர்மிகு இசை

ஓர் வார்த்தையுமற்ற உன்னை
வெறுமனே புரட்ட துவங்குகையில்

மேலும் ஒருமுறை
உதறி விரித்து போடுகிறேன்
இந்த இரவை ...

ரயில் சினேஹிதத்தை போன்ற
நேற்றைய இரவை
நினைத்து பார்க்கையில்

மேலும் ஒருமுறை
உயர்த்தி காட்டுகிறேன்
தனிமையின் கோப்பையை ....
 

சொற்களின் பிடரி

சிறு சொல்லை 
சொல்லிவிடும் வேகத்தில் 
பெய்துவிடுகிறது மழை ....

சிறு மழைஎனினும் 
தேங்கிவிடும் பள்ளங்களில் 
ஈரமிருக்கும் 
"சொல்" ...

கான்கிரீட் கவிதைகள் -3

அள்ளும் மண்ணோடு 
வந்துவிடுகிற 
ஆணுறைகளை 

விதி எனவோ 
விளையாட்டெனவோ
வாரிப் போகிறாள்
சித்தாள்.....

கான்கிரீட் கவிதைகள் -2

வேலையற்ற 
மழைநாளில் 
பசியோடு உறங்குகிறது 
மூலதனம் ....

பசியின்றி தவிக்கிறது 
லாபம் ..

கான்கிரீட் கவிதைகள் -1

முன்பொரு நாள் 
சிறுவன் 
செத்து மிதந்த 
லிப்ட் குழியில் 

மிதக்கிறது 
நகரத்தின் 
சிறு துளி வெயில்