Saturday, March 12, 2011

பாலொளி நாளதை..





இங்ஙணம் வேறேதும் நினைவிராத...


மின்னும் புன்னகையோடும்


மீளவும் முடியாத
கொள்ளவும் இயலாத ஒளியோடும்


கூந்தலின் இழையால்
காற்றை வரைந்த அந்நாளை


நீ நீயென எழுதி தீர்க்கிறேன்..

வெற்றிடத்தில் வாழும் சிறகுகள்....



தொடங்காத பிறைகளென
ஆவல் சிறிதுமில்லை...


சொல்லாடா பொழுதின் கிளையை
இறக்கைகள் படபடக்க
இன்னும் இறுக பற்றினேன்....


மாண்பை அடுக்கிய பரணில்
வார்த்தைகளற்ற வாசமே மீந்தன...


உளறத் தெரியாத சாமரம்
பழகாத காற்றை நிறுத்தன...


நீரோட்டத்தில் விழுந்த பொருளென
போகிறது மௌனம்..
கரையொதுங்கிய மலரோ பொருளோ
கையோடு நதியை எடுத்து வருவதில்லை....


தனித்து விடப்பட்ட ஒரு சிறகுக்கு
அலைவுறத் தெரிந்திருக்கிறது
என்பதொன்றும் பெரிதில்லை....


யாரும் இயங்காத வெளியில்
வீழ்படிவாகும் இவ்வொலி
யாருடையதுமில்லாத போது


உன் இருத்தல் மட்டுமேயுள்ள..
வார்த்தைகளின் சுழலா உலகில்
உள்ளீடற்றவையை திறந்து பார்ப்பதில்
என்ன இருக்கிறது??

மெய்மையின் நிறப்பிரிகை...



நானென் வரிகளை


முகத்தின் பிம்பங்களால் எழுதுகிறேன்....






சூன்யத்தின் நகலென விளங்கும் என் முகம்


ஒரு விதையாகவுமிருக்கலாம்....






கண்ணாடியை சொல்லி குற்றமில்லை...


தளம் மாற மாற


நிறம் மாறிக்கொண்டே இருக்கிறது






ஆதிக்கிழக்கின் முதல் கீற்றிலிருந்து


வெள்ளொளியை நம்பி திரிந்தோம் நாம்






எனினும் என்னுடையதைவிட


என் பிள்ளையின் வாள்


கூராயிருக்கிறது....






புரிவதற்குள் கடந்துவிடும் வினைகளால்


அடுத்த வினாடிகள்


கானல் திரைக்குள்ளிருக்கும்






எந்த வரையறையும் நிலையற்றதென....


நிலத்தை நீரும்


நீரை தீயும்


தீயை நீருமென...


ஒரு மெய்யிலிருந்து கைநழுவி


மறு மெய்யை பற்றிகொள்ளும்


அமானுஷ்யமிருக்கையில்






இது என் நிறமென


இதுதான் என் முகமென


எப்படி நம்புவது??