Tuesday, October 26, 2010

நிறமிழக்கும் இரவு....



இத்தனை காலத்திற்கு பிறகு
உன்னுடையதென்று
உன் புன்னகையை தவிர
என்னிடம் வேறேதும் இல்லை.....


இத்தனை காலத்திற்கு பிறகும்
அந்தியில் அது வண்ணங்களாகி
மேற்கில் விழுந்து மறைகிறது....

கூட்டுப்புழுக்களின் சிம்பொனி.



விடியலில் எழுப்பிய கைபேசி அழைப்பு
நண்பனின் மரணச் செய்தியோடு அணைந்தது...

நேற்றுவரை இருந்ததன்
இன்மை பொறுத்தலில்
தொடர்ந்து கொண்டேயிருக்கும் குகையில்
பாய்ந்து கொண்டேயிருக்கிறது ஒளித்திவலை

சிலர் மரணத்தை
அலமாரிகளில் பூட்டிவைககிறார்கள்,,
சிலர் மீன்தொட்டிகளில்
நீந்தவிடுகிறார்கள்
சிலர் தங்கள் சிறார்களுக்கு
விளையாடும்படி உருட்டிவிடுகிறார்கள்...

வாழ்ந்த நாட்களின்
நெடியேறுதல் நிகழும்
உற்றாரின் மரணத்தில்
தங்கள் வெவ்வேறு வாத்தியங்களிலிருந்து
ஒரு பாடலுக்கென இசைக்கிறார்கள்.....

அவர்களை போல் இல்லாதிருத்தலின்
ஒவ்வாமையை
கோப்பையில் ஊற்றி குடித்து பார்க்கிறேன்....

தீத்துளிஎன மனதில் இருந்த
வினைவிதைத்து வினையறுக்கும்
ஆன்மத்தின் வாள்
பால்வீதியென அறையெங்கும் பிரகாசிக்கையில்
கதவை திறந்துகொண்டு வருகிறேன்...

மிகு உயரத்திற்கு
மரணத்தை பூசி
சிவந்து நிற்கிறது வானம்.....

எதையோ எண்ண வேண்டி
தோற்கும் வெளியில்
மௌனத்தின் கொடியெங்கும்
அலரி பூத்திருக்கிறது மரணம்....

மெல்ல அசைந்து கொண்டிருக்கும் உலகில்....
விருப்பமற்று தொடங்கும் எனதிந்த விடியல்
வெற்றுபடகென மிதக்கிறது..