Tuesday, October 26, 2010

நிறமிழக்கும் இரவு....இத்தனை காலத்திற்கு பிறகு
உன்னுடையதென்று
உன் புன்னகையை தவிர
என்னிடம் வேறேதும் இல்லை.....


இத்தனை காலத்திற்கு பிறகும்
அந்தியில் அது வண்ணங்களாகி
மேற்கில் விழுந்து மறைகிறது....

கூட்டுப்புழுக்களின் சிம்பொனி.விடியலில் எழுப்பிய கைபேசி அழைப்பு
நண்பனின் மரணச் செய்தியோடு அணைந்தது...

நேற்றுவரை இருந்ததன்
இன்மை பொறுத்தலில்
தொடர்ந்து கொண்டேயிருக்கும் குகையில்
பாய்ந்து கொண்டேயிருக்கிறது ஒளித்திவலை

சிலர் மரணத்தை
அலமாரிகளில் பூட்டிவைககிறார்கள்,,
சிலர் மீன்தொட்டிகளில்
நீந்தவிடுகிறார்கள்
சிலர் தங்கள் சிறார்களுக்கு
விளையாடும்படி உருட்டிவிடுகிறார்கள்...

வாழ்ந்த நாட்களின்
நெடியேறுதல் நிகழும்
உற்றாரின் மரணத்தில்
தங்கள் வெவ்வேறு வாத்தியங்களிலிருந்து
ஒரு பாடலுக்கென இசைக்கிறார்கள்.....

அவர்களை போல் இல்லாதிருத்தலின்
ஒவ்வாமையை
கோப்பையில் ஊற்றி குடித்து பார்க்கிறேன்....

தீத்துளிஎன மனதில் இருந்த
வினைவிதைத்து வினையறுக்கும்
ஆன்மத்தின் வாள்
பால்வீதியென அறையெங்கும் பிரகாசிக்கையில்
கதவை திறந்துகொண்டு வருகிறேன்...

மிகு உயரத்திற்கு
மரணத்தை பூசி
சிவந்து நிற்கிறது வானம்.....

எதையோ எண்ண வேண்டி
தோற்கும் வெளியில்
மௌனத்தின் கொடியெங்கும்
அலரி பூத்திருக்கிறது மரணம்....

மெல்ல அசைந்து கொண்டிருக்கும் உலகில்....
விருப்பமற்று தொடங்கும் எனதிந்த விடியல்
வெற்றுபடகென மிதக்கிறது..

Monday, March 1, 2010

அசிரீரிகளின் குரல்வளைஎப்போதும் ஒரு பயம்
இருந்து கொண்டேயிருக்கிறது...

என் வானத்தில்
அவை அசிரீரிகளை உருவாக்கின...

கருமேகங்களை உடலாய் கொண்டு
என் கண்முன்னே
விஸ்வரூபக் களிநர்த்தனம் ஆடின...

ஓங்கி ஓங்கி ஒலித்த
அசிரீரிகளின் குரல்வளை
தப்பிக்க முடியாததொரு மூலையில்
நிற்க நிர்ப்பந்தித்த போது
என்னுடையவை
பூனையின் செயலாகத்தான் இருந்தன.....

பிறகு
எல்லோருடைய வானத்திலும்
அசிரீரிகள் கேட்கத் துவங்கின...

Monday, February 22, 2010

ஒலிகளின் தூவானம்.


ஒரு மழை, ஒரு வெளி, ஓர் பார்வை..

ஏகாந்த வேளை
எதையும் இசைக்க முடியாதிருந்தது....

இசைத்து வெகுநாட்களான
என் கித்தாரை போன்று
மீள்தன்மை கொண்டதாக -என்னால்
இருக்க முடிவதில்லை...

தாய்,சேய் ராகங்களை இணைத்தாயிற்று.
சிம்பொனிகளை இசைத்தாயிற்று ...
வெறும் கூட்டிசையில் விருப்பமில்லை....

மழையின் பேரிரைச்சல்
எதையோ யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தன...

உணர்வுகளின் பகுமானி
ஒலிகளை அளக்கையில்
இம்மௌனத்தை இசைப்பதெனில்
ஸ்வரங்களின் நீட்சி அவசியமாகிறது..

விகிதாச்சாரம் மட்டுமே வேறுவேறு
மற்றபடி
போதையென்பது
தன் மையத்திலிருந்து
நம்மை இயக்குமெனில்
இசையும் போதையென்பதில் சந்தேகமில்லை...

இசையின் உருவடிவம்
மொழியெனில்
வார்த்தையை விட போதையானது
யாதொன்றுமில்லை....

தூறல் நின்றிருந்த நேரம்
வார்த்தையை மேலும் பகுத்தறிவதில்
பிரக்ஞையில்லை

மழைநனைகூரையிலிருந்து நீரில்விழுந்த
இறுதிச்சொட்டின் 'ஒலியானது'..
"இசையானது"..

Friday, January 15, 2010

தலைமுறைகளுக்கான சதுரங்க ஆட்டபிழை
விழித்துப் பார்க்கும் போது
நான் கொலை செய்யப்பட்டிருந்தேன்


தர்க்கங்களின் காய்நகர்த்தி
முடிவற்று சதுரங்கமாடும்
மர்ம நபர்களால்
கொலையுண்டு கிடக்கிறேன்


ரவைகளற்ற கேள்வியும்
மழுங்கலான வார்த்தைகளையும் ஏந்தி
எப்பொழுதும்
முடிவை நிச்சயப்படுத்திக்கொண்டு
ஆட்டம் தொடங்குகிறதெனினும்
ஆட்டவிதியே
தவறெனக் கதறும் -என்னின்
குரல்வளையை நெரிக்கிறது
பரிணாம ஏற்றதாழ்வுகள் .


பரிணாமம் காலத்தின் நேர்தகவேனில்
இங்கே விளையாட வேண்டியது
சதுரங்கமே அல்ல..
அது முடிவற்ற பாதையில் -நீளும்
ஓட்டமென்பதை சொல்வதற்குள்
வெற்றியை பிரகடனபடுத்துகிறார்கள்


தன்னை நிலைநிறுத்திகொள்வதற்காக
வீசிய ஆயுதங்களை
என்னிலிருந்து பிடுங்கிக்கொண்டு
வெறுங்கைவீசி திரும்புகிறார்கள்


அவர்களிடம் சொன்னதெல்லாம்
வரலாறு எனக்கு சொன்னதுதான்


"என் உடலும்
உங்கள் விவாதமும் வீச்சமெடுக்கும்
அடுத்த தலைமுறையில்
நீங்கள் மண்ணாகி போவீர்கள்
உங்கள் பிள்ளைகள்
மரமாகி போவார்கள்
நான் உரமாகி போவேன்"

அச்சம் -ஓர் அரிச்சுவடிஇப்போது நினைத்து பார்க்கிறேன்

சாவதற்கான பயமிருந்த
பால்ய காலங்களில்
அன்றாட இருளும்
விநோத உயிர்களின் சத்தங்களும்
சாத்தானுக்கான காத்திருப்பை நிகழ்த்தின...

என் நிழலைக் கண்டே
பயந்திருந்த இரவில்
கால்களை உதறி உதறி
அப்பாவின் கழுத்தை கட்டிக்கொண்டு
அழுதேனென்றும்
இரவு முழுவதும்
அப்பாவின் தோளிலேயே
தூங்கியதாகவும் சொல்லப்பட்டது

ஒரு விடியலில்
கூரையின் மூங்கில் கழியிலிருந்து
நெடுநீண்ட பாம்பொன்று
முகமருகே தொங்கியது
வெகுநாட்கள்வரை நிழலாடின...

மேலும் பாம்புகள் துரத்துவதாகவே
கனவுகள் சூழ்ந்தன.

முன்னறிவிக்கப்படாத சாத்தானின் வருகை
பாம்பின் தீண்டுதலால்
கொடூரமான இதயமொன்று
பரிசளிக்கப்பட்டது

அது பின்னொரு நாளில்
ஆவாரஞ்செடியில்
புணர்ந்திருந்த சாரைப்பாம்புகளை
மண்வெட்டியால் இருதுண்டுகளாக்கியது

என் மனைவியின் யோனியிலிருந்து
நீண்ட வாலோடும்
நீட்டியிழுக்கும் நாக்கோடும்
துருத்திய கண்களோடும்
பிறக்கவிருக்கும் உயிரிக்காய்
ஆயத்தமாயிருக்கையில்....

வாழ்வதற்கான பயத்தில்
உங்களின் பரிசுத்த ஆவிக்கான காத்திருப்பை
என்மீது திணிக்கும் இக்காலங்களில்

பாம்புகளை தொலைவிலிருந்தே
வேடிக்கை பார்க்கிறேன்

Tuesday, January 5, 2010

..............................

என் பிடிமானமற்ற காலத்திலிருந்து
விழுந்து நொறுங்கும்
உன் அருகாமை,
பூக்களோடும்
புன்னகையோடுமிருந்த
இடைவெளிகளை
ஞாபகப்படுத்துமா தோழி?