Friday, August 7, 2009

பிணந்தின்னிக் கழுகு

கீழ்வெண்மனியை எரித்துவிட்டு
இரத்தம் சொட்டிய
அலகினை சிலுப்பியபடி
பிணங்களாலான இவ்வுலகை
வட்டமடிதிருக்கிறது
பிணந்தின்னி கழுகொன்று.......

"எழவு விழுந்த வீட்ல
மசமசன்னு பேசிகிட்டிருந்தா எப்படி ?
ஆளாளுக்கு ஒரு வேலய பாருங்கப்பா"

கழுகினை தொழும்
பிணங்களின் மத்தியில்
மாட்டிக்கொண்ட பாரதியை
கூர்ந்தபடி நானும் பாடலும்.......

"வாழ வேண்டிய வயசு
என்ன பண்றது
சாதியையும் சாமியையும்
பகைசுக்கிட்டா இப்படிதான்"

அம்மணமாய் நின்ற
ஊரின் மத்தியில்
ஆடைகட்டி வந்தவனைநோக்கி
எக்காளமிட்டு சிரித்தன பிணங்கள்.....

"தப்படிக்க பறையனுக்கு
ஆள் அனுப்பியாச்சா ?
மாடசாமி மக படிக்கிறாளாமே
சுக்கு பயல்களுக்கு வந்த வாழ்வ பாத்தியா"

தன் சாதிக்கென்று
ஆளுக்கு கொஞ்சமாய்
ஜனநாயகத்தை
பிய்த்து கொண்டோடிய
பிணங்களின் மத்தியில்
நிர்வாணப்படுத்தபட்டான் பாரதி....

"நாளைக்கு காடமத்திறத்துக்கு
அம்பட்டனுக்கு தகவல்சொல்லிருங்க
அப்பறம்
கம்யுனிஸ்டு ,கொடியேத்தம்னு
எங்காவது போயிரப்போறான்"

இப்படித்தான்
அவமானபடுத்தப்பட்டும்
நிர்வாணப்படுத்தப்பட்டும்
பாடையேற்றப்படுகிறான் பாரதி
பிணங்களின் உலகில்....

ஒருநாளில்லை ஒருநாள்
ஒரு கையில்
சாட்டையென சுழற்றி
எருமையின் மீதேறி
சுற்றி சுழன்று
ஒவ்வொரு பிணங்களின் முதுகுத்தண்டில்
அழுந்த பதியுமாறு
சுண்டி இழுப்பேன் என்பாடலை
மானுடம் சொல்லிசொல்லி

பிறகொரு நாள்
பிணங்களின் தழும்புகள் தடவி
"ஹோ"வென அழுதபடி
சொல்லடா பாரதீ!
என்னை சுடர்மிகும் அறிவுடன்
ஏன் வளர்த்தாயென்பேன்....
கழுத்தறுந்த கழுகின்திசை விரல்நீட்டி
கண்சிமிட்டி சிரித்திருப்பான்
ஞானசெறுக்கன்.....

No comments:

Post a Comment