Friday, August 7, 2009

மறந்துவிடப்பட்ட மானுடப் புள்ளிகள்

ஆதியில் நான்
சுழி சுழியிலிருந்து வந்ததாக
பிரகடனப்படுத்தப்பட்டேன்

அண்டங்கள் ,பேரண்டங்கள்
பால்வீதிகள், கோள்கள்
வால்நட்சத்திரங்களென
யாவும் வட்ட நீள்வளயமாக- நான்
வரைந்தேனென சொன்னான்
சிவப்பு சட்டைக்காரன்

சாம்பல் பூசிக்கொண்டும்
முள்முடி, சிலுவைகளென
யாதுமற்ற வெளியென
போதி மரமென
சுழியிலிருந்து நான்
இயல் எண்களாய் வளர வளர
ஆதியில் எனக்கு
சுழியிட்டவன் மேல்
சந்தேகம் வலுத்தது

வரைகோடுகள் நீளும் பாதையெங்கும்
சக்கரங்கள் உருள உருள
தட்டையாயிருந்த உலகம்
உருண்டையான போது

இயற்கை விளையாடும்
நுண்புள்ளிகளில்
வியப்பின் உச்சத்தையும்
கூர்ச்செரியும் பயத்தையும்
இணைத்த பரவளையமே
என்னை உருவாக்கியதாக சொன்னான்
கருப்பு சட்டைக்காரன்

நானே என் தங்கையை
கற்பழித்தும்
நானே என் சகோதரனை
வெட்டிச் சாய்த்தும்
நானே என் உறவுகளை
பூண்டோடு அழித்துக்கொண்டே
தசம பின்னங்களில்
விரவுகிறேன்

எச்சரிக்கிறேன் .....

சுழி, இயல், தசம, பின்னங்களற்று
பரவளையம்
நீள்வளையங்களற்று
நானென் பெரும்பான்மை
அடைவதற்குள்
நீங்கள் ஒரு நேர்க்கோட்டை
வரையவில்லை எனில்
கிழிந்து போகும் வரைபடம்......

No comments:

Post a Comment