Friday, August 7, 2009

நிலவெரியும் இரவினைப் பற்றியதே

நிலவெரியும் இரவினைப் பற்றியதே
அவனுடைய கவலையெல்லாம்...!


யுகமென கழியும்
ஒவ்வொரு இரவிலும்
பாடுபொருளைத்
தேடி அலைவதாகச் சொன்னான்.......


இவ்விரவில் ....
மேகங்கள் தன்னை விட்டு
விலகிசெல்வதாகவும்
மோகினியொன்று தன்னை
அழைப்பதாகவும்
யாரோ தன் காதருகில்
திரும்ப திரும்ப
ஆணி அறைவதாகவும் சொன்னான்


ஒரு தீவுச் சண்டையில்
புதைக்கபடவேண்டிய ஒராயிரத்திற்க்காக
ஒரு தீபகற்ப தேர்தலில்
விலைபேசப்பட்ட பலகோடிகளைப்
பற்றிய ஒரு கதையையும்


கோத்ரா தெருவொன்றில்
ஒரு தாயின்
வயிற்றை கிழித்து
உள்ளிருந்த குழந்தையை எடுத்து
குத்திக்கொன்ற ஒரு கதையையும்
ஆறுதலாகச் சொன்ன போது....


நிலவினை வெறித்தபடி
என்னையும் சேர்த்து
யாருமே அவனுக்காக
வாழ்வதில்லை என்பதாக சொன்னான்....


அவளைப் போலவே -இந்த
இரவும் நிலவுமென
ஓயாது புலம்பியிருந்தான்...


நேற்றிரவில்....
பாடுபொருள் கிடைக்காத விரக்தியில்
தன்னைத்தானே
தூக்கிலிட்டு செத்தான் ...

பாடுபொருளாகிபோன
அவனுடையதெல்லாம்
நிலவெரியும் இரவினைப் பற்றியதே.......!

No comments:

Post a Comment