Friday, August 7, 2009

"பறவையாதல் வினை"

நாளை பற்றிய
கனவிலிருக்கும் காளான்களெனவும்
பிறவிபெருங்கடலென
கோடையை கடந்திருக்குமோர்
மீன்கொத்தும் நாரைஎனவும்
விரிசல் விழுகிறது
கற்பனை எதார்த்த கோட்டில்

நீயில்லாத இன்றின்
எதார்த்தச் சங்கிலியில்
ஊசல்குண்டென அலைவுறும்
யாதுமற்றதோர் கனவிற்கான
புற்றீசல் எண்ணங்களை
தாழிட்டு திரும்புகையில்
மதகுடைந்து விரவும்
சொட்டென தொடங்கும் நதி.....

பாடலின் அறிமுகமில்லாத
ஒரு பொழுதில்
துண்டு துண்டாய் வெட்டுண்ட
கனவுகளை நீட்டியபோது
சேதாரம் தரமறுக்கும்
காலத்தின் கையில்
கிண்ணம் நிறைய என்மூச்சு

பாடலாதல்
கருணை தற்கொலைஎனவும்
பறவையாதல் முக்திஎனவும்
பறவையாதல் வினைபற்றி
அப்பொழுதெல்லாம் அறிந்திருக்கவில்லை.....


கண்டநகர்வெனவரும் காட்சிபிழையில்
தலைசுற்றி அரற்றியிருக்கும்
என்னை திறந்தால்
விடியாத இரவொன்றும்
வெற்றிடமுமாய் கிடைக்குமென
நினைத்திருக்கையில்
நிரம்பி வழியும் பொருட்டு
உயிரோடு புணர்ந்து கொண்டு
புலர்கிறது என் கானம்....

இணையினின்று
தனித்த பறவையின் தற்கொலையென
காற்றின் பெருவெளிகளில்
பறவையின் சிறகுகளென
உங்களுக்காக
பாடல்களை உதிர்த்தவாறு
உயர உயரமேவி
சிறகுகள் தீர்ந்த பொழுதில்
என் கண்களை மூடிக்கொண்டபிறகு
கைவீசி நடக்குமென் காதல்.....

No comments:

Post a Comment